போலீஸ் விரட்டி சென்றதால் மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் அரியாவூர் பகுதியில் இரவு நேரத்தில் திருட்டுத் தனமாக மணல் அள்ளுவதாகத் திருச்சி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்வ இடத்திற்கு, ராம்ஜிநகர் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அப்போது, சிலர்
டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அதில் சிலர் போலீசாரைப் பார்த்ததும், நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.

டிராக்டர் டிரைவர் மட்டும், வண்டியில் லைட்டை அணைத்துவிட்டு, டிராக்டரை வேகமாக எடுத்துச் சென்றுள்ளார். போலீசாரும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்றுள்ளனர். இதனிடையே, வெளிச்சம் இல்லாமல் டிராக்டரை இருட்டில் ஓட்டிச் சென்றதால், செங்ககவுண்டன்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், எதிர்பாராத விதமாக தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், டிராக்டரின் இஞ்சினில் சிக்கிய டிரைவர், பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிராக்டர் விபத்துக்குள்ளான இடம் கரூர் மாவட்டம் தோகமலை காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால், துரத்தி வந்த போலீசார் திரும்பிச் சென்றுவிட்டார். பின்னர் இந்த விபத்து குறித்து சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு வந்த தோகமலை போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர்.