ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து 16 மணி நேரங்கள் கடந்ததால் மணப்பாறை சுற்றியுள்ள கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுகாட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் - கலாராணி தம்பதியின் 2 வயது மகன் சுஜிர்த் வில்சன், நேற்று மாலை சுமார் 5.45 மணி அளவில் வீட்டில் அருகில் விளையாடிக்கொண்டிருந்தார்.

Surjith

அப்போது, அந்த பகுதியில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில், சுஜிர்த் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவரது தயார் ஓடிவந்து பார்த்தபோது, சிறுவன் சுமார் 20 அடி பள்ளத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. 

Surjith

இது குறித்து போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து போலீசார், குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஆழ்துளைக் கிணற்றின் அருகிலேயே ராட்சத இயந்திரங்கள் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், அதிர்வு ஏற்பட்டு, குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணற்றில் மண் சரிந்துள்ளது. இதன் காரணமாக, சிறுவன் மீது மண் கொட்டியது.  இதனால், பள்ளம் தோண்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து, கயிறு மூலம் குழந்தையை மீட்கும் முயற்சி எடுக்கப்பட்டபோது, அது பலன் அளிக்காமல், குழந்தை மேலும் 20 அடி ஆழத்திற்குச் சென்றுள்ளார். இப்படி பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிறுவன் மேலும் மேலும் கிணற்றின் ஆழத்திற்குச் சென்றுள்ளார். 

தற்போது சிறுவன் சுஜிர்த், சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காலை 6 மணி முதல் சிறுவனிடமிருந்து எந்தவித முனகல் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 16 மணி நேரத்திற்கு மேல் ஆனதால், உயிருக்குப் போராடும் குழந்தை மீட்கும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Surjith

இதற்காக, நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் பணியாற்றும் கிருஷ்ணாராவ் தலைமையிலான மீட்புக் குழுவினர், நவீன ரக கருவிகளுடன் நடுக்காட்டுப்பட்டிக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.