கொரோனா பரவல் குறித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளதாக” குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமிக்கு 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். அதன்படி,

1. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலே இல்லை என்பது உண்மை என்றால், தொற்று அதிகரிக்க காரணம் என்ன?

2. கொரோனாவை அறவே ஒழிப்போம் என்ற பொய் பேட்டிகளைத் தருவதை விட்டு, செயல்திட்டம் எப்போது அமைப்பீர்கள்?

3. மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?

4. முக்கிய எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசிக்க தொடர்ந்து மறுத்து வருவதன் காரணம் என்ன?

5. வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அரசு ஆர்வம் காட்டுவது எப்போது?

ஆகிய கேள்விகளை மக்கள் சார்பாக நான் முதலமைச்சர் பழனிசாமிக்கு முன்வைக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் “தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் இல்லை என கூறி, அரசியல் ஆதாயம் தேட ஆளும் கட்சியினர் முயல்கின்றனர் என்றும், சென்னையில் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து விட்டதையே, நோய் பரவல் காட்டுகிறது” என்றும் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

அதேபோல், “கோயம்பேடு சந்தை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் நோய்த்தொற்று அதிகரித்தது என்றும், தமிழகத்தில் 95 சதவீத தொற்று மாநிலத்திற்கு உள்ளேயே ஏற்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனால் “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துங்கள்” என்றும், தமிழக அரசுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குறிப்பாக, “தமிழகத்தில் 10 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற நிலை உள்ளது என்றும், இந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் விகிதம் அதிகம்” என்றும் மு.க.ஸ்டாலின் கவலைத் தெரிவித்தார்.

அத்துடன், “சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.