முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால், நாடு முழுவதும் 3 வது முறையாக ஊரடங்கை நீட்டித்து, மத்திய அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில், நாடு முழுவதும் சில தளர்வுகள் அளித்தது.

அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது உள்ள கொரோனா நிலவரம் குறித்தும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்க முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூடி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று குறை்த காணப்படும் கிராமங்களில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும், அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளன.

அதேபோல், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாகவும், வாழ்வாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

அத்துடன், கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் சென்னையில், அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பத பற்றியும், மத்திய அரசு நேற்று அறிவித்த ஊரடங்கு உத்தரவை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது பற்றியும், தமிழக அமைச்சர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால், தமிழகத்தில் தளர்வுகளா? அல்லது கட்டுப்பாடுகள் நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.