சமூக இடைவெளியுடன் குடை பிடித்தபடி எப்படி மது வாங்குவது என்று குடிமகன் ஒருவர், பயிற்சி எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிமகன்கள் அனைவரும், சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து, குடை பிடித்தபடி வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதனால், பல்வேறு டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தொடர்பான கட்டங்களும் வரையப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில், தடுப்புகள் அமைத்து 6 அடிக்கு ஒருவர் நிற்பது போல் மரத்தாலான கட்டைகள் கட்டி, வட்டம் வரைந்து தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அத்துடன், திருப்பூரில் குடையுடன் வந்தால் மட்டுமே மது விநியோகம் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், மதுப்பிரியர் ஒருவர் குடை பிடித்தபடி, சமூக இடைவெளியுடன் ஒவ்வொரு தடுப்பதாகத் தாண்டி மதுவை எப்படி வாங்குவது என முன்னோட்டம் பார்த்தபடியே முன்னேரி செல்கிறார்.

இதை ஒருவர், வீடியோவாக எடுக்க அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, கோவையில் வாழை மரம், மாவிலை தோரணத்தால் அலங்கரிக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சீல் வைத்து அந்த பகுதி வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் பஞ்சாப், சத்தீஸ்கரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மது பாட்டில்கள் டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.