திருவண்ணாமலையில் பக்தர்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கிய நிலையில், வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, “ஏகன் அனேகன் ஆகி, அனேகன் மீண்டும் ஏகன் ஆக மாறும் தத்துவத்தை” மெய்ப்பிக்கும் விதமாக, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு, கோயில் கருவறையில் பரணி தீபம் மிகச் சிறப்பாக ஏற்றப்பட்டது.

ஏகன் அனேகன் தத்துவத்தை உணர்த்தும் விதமாக,ஒரு தீபத்திலிருந்து 5 தீபங்கள் ஏற்றப்பட்டு, பின்னர் மீண்டும் அந்த தீபத்திலிருந்து ஒரே தீபமாகப் பரணி தீபம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாலை 6 மணிக்கு, கோயிலின் பின்புறமுள்ள சுமார் 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்கள் “அரோகரா அரோகரா” என்று பக்தி முழக்கங்கள் எழுப்பினர் பரவசப்பட்டனர்.

மேலும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்போது, வருடத்திற்கு சில நிமிடங்கள் மட்டும் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், இன்று அண்ணாமலையார் கோயிலின் கொடிமரம் முன்பு பக்தர்களிடையே எழுந்தருளினார். அப்போதும், பக்தர்கள் அனைவரும் “அரோகரா” கோசங்களை எழுப்பி சுவாமியை வழிப்பட்டனர். தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

அத்துடன், திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா தீபம் ஏற்றப்படுவதை ஒட்டி அண்ணாமலையார் ஆலயம் முழுவதும் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு உள்ளது, பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், நாளை காலை 11.10 மணி முதல், நாளை மறுதினம் காலை 11.05 மணி வரை பவுர்ணமி இருக்கிறது. இதனால், பக்தர்கள் இன்றும் நாளையும் 2 நாட்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளதால், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், திருவண்ணாமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.