பாலில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு, தொடர்ந்து பாலியல் தொல்லை தந்த கணவரின் அக்கா கணவரை இளம் பெண் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த பெருமாள்பட்டியை சேர்ந்தவ 30 வயதான பாண்டீஸ்வரனுக்கு 23 வயதில் நிரஞ்சனா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

அதேபோல், பாண்டீஸ்வரனின் அக்காள் 33 வயதான ராஜேஸ்வரி, தனது கணவர் மணிகண்டன் உடன், பக்கத்து ஊரில் வசித்து வருகிறார். மணிகண்டன், அந்த ஊரில் வாழை இலை வியாபாரி செய்து வருகிறார்.

இந்நிலையில், இரு வீட்டாரும் நெருங்கிய சொந்தம் என்பதால், அடிக்கடி நேரில் சந்திப்பதும், வீட்டிற்கு வந்து செல்வதும் வழக்கம்.

அதன்படி, பாண்டீஸ்வரன் வீட்டிற்கு அடிக்கடி வரும் அவருடைய அக்காள் கணவர் மணிகண்டன், பாண்டீஸ்வரனின் மனைவி நிரஞ்சனாவுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாண்டீஸ்வரன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவர்கள் வீட்டிற்கு வந்த மணிகண்டன், நிரஞ்சனா குடிக்கும் பாலில் மயக்க மருந்தைக் கலந்துள்ளார். அதைக் குடித்த சிறிது நேரத்தில், நிரஞ்சனா மயக்கமடைந்த நிலையில், அவரது ஆடைகளைக் கலைத்து, அவரை தனது செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார்.

இதனையடுத்து, சொல்போன் மூலம் நிரஞ்சானவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனிடையே, பாண்டீஸ்வரன் ஊர் திரும்பிய நிலையில், நடந்ததைச் சொல்லி, நிரஞ்சனா அழுதுள்ளார்.

மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்க அக்கா வீட்டிற்கு பாண்டீஸ்வரனும், நிரஞ்சானாவும் சென்றுள்ளனர். அங்கு, பாண்டீஸ்வரனும் - மணிகண்டனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மணிகண்டனை, நிரஞ்சானா சராமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அங்குள்ள ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் நிரஞ்சானா சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.