9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் 9 வயது சிறுமி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வீட்டில் அத்துமீறி நுழைந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், சிறுமி சத்தம் போடவே, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார். இதனையடுத்து, சிறுமியின் சத்தம் கேட்டு பெற்றோர்கள் ஓடிவந்து கேட்டபோது, தனக்கு நேர்ந்த அவலங்கள் குறித்துக் கூறியுள்ளார்.

இதனால், சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரைக் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவனைத் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டத் தவறினால், மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.