மதுரையில் ஒட்டப்பட்டு வரும் “அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்” போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா நடிகர்கள் பெரும்பாலும், தொடக்கத்தில் ரசிகர் மன்றம் தொடங்கி, அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து, இறுதியாக அரசியலுக்கு வருவது வழக்கம். அதன்படி ரஜினி, கமல், விஜய், விஷால், சரத்குமார் எனப் பலரும் அரசியல் பேசுவதோடு, அரசியலுக்கும் வந்துவிட்டனர். 

 Actor ajith election poster in Madurai

இதனிடையே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, நடிகர் அஜித் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த நடிகர் அஜித், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டதாக அதிரடியாக அறிவித்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து, அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நடிகர் அஜித் கண்ணியமானவர், தொழில் பக்தி மிக்கவர்” என்று புகழாரம் சூட்டினார். அத்துடன், “அஜித்துக்குத் தமிழக அரசியல் பற்றிய புரிதல் இருப்பதாகவும், மற்றவர்களுக்கு அது இல்லை” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தைத் தெரிவித்தார். அந்த அளவுக்கு நடிகர் அஜித்குமார் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கிறார்.

 Actor ajith election poster in Madurai

இந்நிலையில், மதுரை வீதிகளில் “அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்” என்கிற பெயருடன்,  பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. அதில், வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் “மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிடும் உங்கள் வீட்டுப் பிள்ளை ரைட் சுரேஷ் அவர்களுக்கு நமது வெற்றி சின்னம் உழைப்பாளி சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

அடுத்த மாதம் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படி ஒரு போஸ்டர் ஒட்டுள்ளதால், புதிதாக இப்படியொரு கட்சி துவங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.