தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்க் குடமுழுக்கு வேண்டி மாநாடு நடைபெற்று வருகிறது.

தமிழக கோயில்களின் வழிபாட்டு முறையில், தமிழில் மந்திரங்கள் ஓத வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா, வருகிற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு, சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குடமுழுக்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழில் - தமிழர் மரபுப்படி குடமுழுக்கு வேண்டி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், இன்று தஞ்சாவூரில் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டின் தொடங்க நிகழ்வாக, தமிழ் திருமுறைகள் இசைக்கப்பட்டன. பின்னர், விழிப்புணர்வு நிகழ்ச்சியாக எழுச்சிமிகுப் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, பல்வேறு ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த பெருமக்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்திடக் கேட்டுக் கொண்டு, தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

அப்போது, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “சமற்கிருதத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, தமிழ்வழியில் மட்டும் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதுதான் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் கோரிக்கையாகும். இது தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனையாளர்கள், தமிழர் ஆன்மிக மரபு போற்றும் பெருமக்கள் அனைவரின் கோரிக்கையும் ஆகும்.

காலங்காலமாகத் தமிழ்நாட்டில் சிவநெறி மற்றும் திருமால் நெறி கோயில்களில் தமிழில்தான் கருவறை அர்ச்சனைகளும், வழிபாடுகளும் நடந்திருக்கின்றன. இந்த மரபை இடைமறித்து மாற்றி சமற்கிருதத்தை ஒரு சாரார் திருக்கோயில்களில் திணித்தார்கள். அந்த ஆக்கிரமிப்பை நீக்கித் தமிழ் வழிபாட்டு அர்ச்சனையும், குடமுழுக்கும் நடைபெற வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள கோரிக்கை” என்றும் பெ.மணியரசன் கேட்டுக்கொண்டார்.