சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் தேவையில்லை என்ற ஒரே முடிவில் பாரதிராஜா - எஸ்.ஏ.சந்திரசேகர் தீர்மானமாக உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், முரளிதரன், கேயார் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சென்னையில் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பாரதிராஜா, “ தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் என்பது தேவை இல்லை” என்று குறிப்பிட்டார்.

“தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாகப் பிரிந்து இருக்கிறார்கள் என்றும், பிரிந்துள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், “தலைவர் பதவிக்கு வருபவர்களுக்குச் சேவை மனப்பான்மை இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். “ஆனால் பலதரப்பட்ட போட்டி ஏற்படும் போது, சேவை மனப்பான்மை என்பது அங்கு இருக்காது என்றும், இதனால் பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தைத் தொலைத்து விட்டு, செயலாற்ற வேண்டிய நிலை ஏற்படும்” என்றும் கவலைத் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “ தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் என்பது தேவை இல்லை. நாகரீகமான முறையில் ஒரு சங்கம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மற்றபடி, நாங்கள் பதவிக்கு வரவேண்டுமென்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

“பதவியிலிருந்தாலும், ஒவ்வொருவருக்குள்ளும் ஒற்றுமை இல்லாததால், தயாரிப்பாளர் சங்கத்தில் எதையுமே சாதிக்க முடியவில்லை. நான் தலைவராக இருந்த போதும், இதே நிலைதான் இருந்தது” என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் கவலை தெரிவித்தார்.

இதனிடையே, சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் விவகாரத்தில், பாரதிராஜா - எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் ஒரே முடிவில் ஒற்றுமையாக இருப்பதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.