“என்கவுன்டர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளதாக” சைபராபாத் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சைபராபாத் காவல் ஆணையர், தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, “குற்றம் நடந்த சம்பவ இடத்திற்குக் குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு வந்தபோது, குற்றவாளிகள் போலீசாரை வேண்டும் என்றே அலைக்கழித்தனர். குற்றவாளிகளுடன் 10 போலீசார் பாதுகாப்பிற்காக வந்தபோதும், அதில் ஒரு போலீசாருடைய துப்பாக்கிய பிடுங்கி, சக போலீசாரை மிரட்டி உள்ளனர்.

குற்றவாளி கைக்குத் துப்பாக்கி சென்றவுடன், மற்ற குற்றவாளிகள் அங்கிருந்த கற்கலை எடுத்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, துப்பாக்கியைத் தந்துவிட்டுச் சரணடையும்படி போலீசார் எவ்வளவோ கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் துப்பாக்கியை வைத்து, போலீசாரையே மிரட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனால், எங்களுக்கு வேறு வழியில்லாமல் நாங்கள், 4 பேரையும் சுட்டு என்கவுன்டர் செய்துவிட்டோம்.

முன்னதாக, அந்த குற்றவாளிகள் 4 பேரும் தாங்கள் செய்த குற்றத்தை எங்களிடம் ஒப்புக்கொண்டனர். குற்றம் நடந்த பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார்கள். அதைக் கேட்டபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், போலீசார் தரப்பில் 2 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. என்கவுன்டர் குறித்து மாநில அரசுக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் விளக்கம் தரப்படும்” என்று அவர் விளக்கம் அளித்தார்.