“என் கணவரைக் கொன்ற இடத்திலேயே என்னையும் கொல்லுங்கள்..” என்று ஐதராபாத் என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் கர்ப்பிணி மனைவி கதறி அழும் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 27 ஆம் தேதி, நாட்டையே உலுக்கும் வகையில் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் மருத்துவர், கடத்தப்பட்டு வாயில் மது ஊற்றப்பட்ட நிலையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து, நேற்று அதிகாலை அந்த 4 பேரும் தப்பி ஓட முயன்றபோது, என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தெலங்கானா ஊடங்களுக்கு பேட்டி அளித்துள்ள என்கவுன்டரில் கொல்லப்பட்ட சின்ன கேசவலுவின் மனைவி, “என் கணவருக்கு எதுவும் ஆகாது, அவர் திரும்பி வந்துவிடுவார் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் கணவர் சடலமாகக் கிடக்கிறார்.

என் கணவர் இறந்த இடத்திற்கே என்னையும் கூட்டிச் சென்று சுட்டுத் தள்ளுங்கள் என போலீசாரிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். என் கணவர் இறந்த பிறகு, இனி எனக்கு எதுவும் இல்லை. கடந்த வருடம் திருமணமான நிலையில், தற்போது நான் கருவுற்று இருக்கிறேன்” என்று கதறி அழுதுள்ளார்.

அதே நேரத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சிவாவின் தந்தை ராமப்பா பேசும்போது, “என் மகன் தவறு செய்திருக்கலாம். ஆனால், இதுதான் முடிவா?. நாட்டில் எவ்வளவோ பேர் பலாத்காரம், கொலையெல்லாம் செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றுகிறார்கள். அவர்களையும், இதேபோல் உங்களால் சுட்டுக்கொல்ல முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேரும் மதுவுக்கு அடிமையானவர்கள் என்றும், வீட்டில் பெரியவர்களின் பேச்சை கேட்காமல், சுற்றித்திரிந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், 4 பேருடைய குடும்பமும், அதிக படிக்காத, வசதியில் பின் தங்கிய குடும்பம் என்பதால் தான் போலீசார் இப்படி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.