திருச்சியில், மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழந்த நிலையில், சிவகங்கையில் குடிபோதையில் தம்பியையும் தம்பி மனைவியையும் அருவாளால் வெட்டிய அண்ணன், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மது, உயிரை கொல்லும்! என்ற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது. ஊரடங்கால், 43 நாட்கள் அமைதி பூங்காவாகத் திகழ்ந்த தமிழகம், தற்போது மதுக்கடைகள் திறந்தின் மூலமாக, மீண்டும் ரத்த பூமியாக மாறித் தொடங்கியிருக்கிறது.

அதற்கு சாட்சி சொல்கிறது, திருச்சி மற்றும் சிவகங்கை ஊரில் நடந்த போதை சம்பவங்கள்.

43 நாட்கள் ஊரடங்குக்குப் பிறகு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளான நேற்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் குடிபோதையிலிருந்த அண்ணன் வைரவசுந்தரம், தனது தம்பி முருகானந்தம் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்கனவே இடப்பிரச்சனை இருந்துள்ளது. இத்தனை நாட்கள் அமைதி காத்து வந்த வைரசுந்தரம், நேற்று மதுக்கடை திறந்ததும், போதை ஏற்றிக்கொண்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்ட, தம்பி முருகானந்தம் மற்றும் அவரது மனைவியையும் அருவாளால் வெட்டி உள்ளார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அழப்பாபுரம் போலீசார் வழங்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், தப்பி ஓடிய வைரசுந்தரத்தையும் தேடி வருகின்றனர்.

அதேபோல், திருச்சி மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், அருந்தி விட்டு படுத்திருந்தவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து விரைந்த வந்த மலைக்கோட்டை போலீசார், அவர் மதுவினால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக அவர் உயிரிழந்தாரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.