டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் வீட்டை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட 5 சிறுவர்களையும், போலீசார் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் படூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஆகாஷ், தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகிறான்.

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கும் 10 வயது சிறுவன் ஆகாஷ், பலமுறை கடிதமும் அனுப்பியிருக்கிறான்.

இந்நிலையில், 43 நாட்கள் ஊரடங்கிற்குப் பிறகு நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த அந்த சிறுவன், தனது சக நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் படூரிலிருந்து முதலமைச்சர் பழனிசாமி, வீட்டை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டான்.

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் அந்த 5 சிறுவர்களும் சென்றுகொண்டிருந்தபோது, அந்த சிறுவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், டாஸ்மாக் விவகாரத்தில் மக்களைத் தூண்டிவிட்டு எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடுவதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 10 வயது சிறுவன் ஆகாஷ், தனது சக நண்பர்களுடன் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் வைரலாகி வருகிறது.