டாஸ்மாக் கடை திறப்பால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும், 43 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால், கடந்த 40 நாட்களாகக் குறைந்திருந்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், நேற்று முதல் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் நிறைய சம்பவங்கள் நடைபெற்றன. அதில், குறிப்பிட்ட சில சம்பவங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

திருச்சி அருகே மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே பயங்கர மோதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டதில், 3 பேரிக்கு மண்டை உடைந்து, ரத்தம் சொட்டியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 3 பேரையும் மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன், இது குறித்து வழக்கப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அலங்காநல்லூரில் தந்தை மது அருந்தி வந்ததால், மகள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள செட்டி குளத்தில், குடிபோதையிலிருந்த மகன், தாயை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, வழக்குப் பதிவ செய்த போலீசார், தாயைக் கொன்ற மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே உடன் பிறந்த தங்கையின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போதையில் வந்த அண்ணன், தங்கையைக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனைக் கைது செய்து, அழைத்துச் சென்றனர்.

திருவாரூர் அருகே வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் பள்ளி மாணவி ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, யார் அடித்துக்கொன்றது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர், சாலையில் சென்றவர்களை திடீரென தாக்கித்தொடங்கினார். இதனை அடுத்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சேர்ந்து, அந்த போதை இளைஞருக்குத் தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் இளைஞரை மீட்டு, விசாரணை நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், மதுபோதையில் வந்த இளைஞர்கள் 2 பேர், மற்றொரு இருசக்கர வானத்துடன் மோதியதில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் இதுபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு குற்றச் சம்பவங்கள், குடிபோதையில் நடந்துள்ளதாக, வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.