4 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சந்தோஷ், திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கருவிழிக்காடு பகுதியைச் சேர்ந்த 20 வயதான சத்யாவைக் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, தான் வேலைப்பார்க்கும் திருப்பூருக்கே சத்யாவை அழைத்துச் சென்று, அங்கு குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 5 மாதங்களாக குடும்பம் நடத்திய சந்தோஷ், திடீரென்று கடந்த மாதம் மாயமாகி உள்ளார்.

இதனால், பயந்துபோன சத்யா, அங்குள்ள காவல் நிலையத்தில் தனது கணவரைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.

இதனிடையே, திருப்பூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சசிகலாவைக் காதலித்து திருமணம் செய்த சந்தோஷ், அவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக சத்யாவிற்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த சத்யா, இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், அங்கு விரைந்து சென்ற போலீசார், சந்தோசை கைது செய்து விசாரித்தனர். அப்போது, மேலும் இதுபோன்று 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களுடன் வாழ்ந்ததை ஒப்புக்கொண்டார். இதுவரை மொத்தம் 4 பெண்களைத் திருமணம் செய்துள்ளதாகவும், சிலரிடம் தற்போது பழகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.