வரும் கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, 2 வேளை சுழற்சி முறை வகுப்புகள் நடத்தவும் சிஜி தாமஸ் தலைமையிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால், கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது வரும் 30 ஆம் தேதி வரை 5 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில மாவட்டங்களாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களில் நிலவும் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், ஆண்டு தோறும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுது வழக்கமாகக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பது தள்ளிக்கொண்டே செல்கிறது. இதனால், ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால், வரும் கல்வியாண்டில் என்ன மாதிரியான மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஜி தாமஸ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவைத் தமிழக அரசு நியமனம் செய்தது.

இதனையடுத்து, அந்த குழு தற்போதைய சூழலை முழுமையாக ஆலோசனை செய்து, வரும் கல்வி ஆண்டியில் பின்பற்ற வேண்டிய சில விசயங்களைத் தமிழக அரசுக்கு அறிக்கையாக அளிக்க உள்ளன. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய பரிந்துரைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்யலாம் என்று, சிஜி தாமஸ் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல், வரும் கல்வி ஆண்டில் பாடத்திட்டங்களைக் குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்தும் அளிப்பது தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, காலை மற்றும் பிற்பகல் என இருவேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், சிஜி தாமஸ் தலைமையிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு அதன் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து, அதன் பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கும் என்றே பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.