தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, முதலில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறபித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

பின்னர் அந்த ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 3 வது முறையாக நேற்று வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 54 நாட்கள் ஆகியும் இன்னும் குறையாமல் இருப்பதால், 55 வது நாளான இன்று முதல் 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 31 ஆம் தேதி வரை 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு பணிகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருமண விழாக்களில் இதுவரை 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதி இருந்த நிலையில், இனி 50 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்றும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அனைவரும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தைப் பொருத்த வரை 50 சதவீத பணியாளர்களுடன், அரசு அலுவலகங்கள் செயல்படத் துவங்கியுள்ளன.

அதேபோல், விளையாட்டு வளாகங்கள், மைதானங்களைத் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. மாநிலங்கள் இடையேயான பஸ் போக்குவரத்து பற்றி சம்மந்தப்பட்ட மாநிலங்கள் முடிவு எடுத்து இயக்க அனுமதி தரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர் 25 மாவட்டங்களுக்கு மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல், சென்னையில் இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அனுப்பி உள்ள புதிய சுற்றறிக்கையில், “ஊரடங்கை நீர்த்துப்போகச் செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது” என்று, தெரிவித்துள்ளது.

மேலும், “தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.