ரயில் வரும்போது செல்போனைப் பார்த்தபடி பெண் ஒருவர்,​​​​​​தண்டவாளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் பகுதியில் உள்ள எஸ்ட்ரெகோ மெட்ரோ ரயில் நிலையத்தில், ஏராளமான பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்தனர். சிலர், அங்குள்ள இருக்கையில் அமர்ந்தபடி காத்திருந்தனர்.

மெட்ரோ ரயில் சற்று அருகில் வரவே, அமர்ந்திருந்த பெண் ஒருவர், செல்போனை பார்த்தபடியே பிளாட்ஃபாமை நோக்கி நடத்தார். அப்போது, நடைமேடையின் நுனியளவு முடிந்தது தெரியாமல், ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டார்.

இதனைப் பார்த்த சக பயணிகளும், கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த சக பயணிகள் கத்தி கூச்சலிடவே, வந்துகொண்டிருந்த மெட்ரோ ரயில் அப்படியே நிறுத்தப்பட்டது. இதனால், சிறு காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினார்.

இதனையடுத்து, நடைமேடையில் ரயிலுக்கு நடந்து செல்லும்போதும், ரயிலுக்காக அறையில் காத்திருக்கும்போதும், பயணிகள் யாரும் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே, ரயில் வந்துகொண்டிருக்கும்போது பெண் ஒருவர், தண்டவாளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.