மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மேலூர் சாலையில் உள்ள பொதிகை நகரைச் சேர்ந்த 61 வயதான சிவகுரு, பாஜகவின் சிவகங்கை மாவட்ட
கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக இருந்து வருகிறார். மேலும், சிவகங்கையில் செவிலியர் பயிற்சி மையம் மற்றும் கேட்ரிங் தொழிற்படிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், செவிலியர் பயிற்சி மையத்தில் பயிலும் 19 வயது மாணவி ஒருவரிடம், தன் ஆசைக்கு இணங்கினால், உள்ளீட்டு மதிப்பெண் கூடுதலாக வழங்குவதாகக் கூறியும், ஆசை வார்த்தைகள் கூறியும், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால், மாணவியின் அன்றாட செயல்பாடுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த மாணவியின் பெற்றோர், மாணவியிடம் இது தொடர்பாக விசாரித்துள்ளனர். அப்போது, செவிலியர் பயிற்சி மையத்தின் முதல்வர் சிவகுரு துரைராஜ், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததைக் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இது தொடர்பாக, சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், சிவகுரு துரைராஜை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.