“சிவனும் - முருகனும் தந்தை மகன் இல்லை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

தமிழர்களின் ஆதி முதல் கடவுகளாக வர்ணிக்கப்படுபவர் சிவன். அதேபோல், தமிழர்களின் முப்பாட்டன் முருகன் என்று சீமான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முழங்கினார்.

இந்நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் இணையதள பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், “மராட்டிய சரபோஜி மன்னர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை வென்று ஆண்டது போல், மராட்டியரான ரஜினி படம் எடுத்து வந்து, ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், “தமிழர்களின் தெய்வமாகப் பார்க்கப்பட்ட கொற்றவை தான் உண்மையான பார்வதி என்று குறிப்பிட்டார். சிவனும் - முருகனும் வேறு வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களைத் தந்தை மகன் என்று திரைக்கதை எழுதி தமிழர்கள் காலம் காலமாக நம்ப வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், “கண்ணன் கருமை நிறமா? நீல நிறமா? என்று கவிஞர் கண்ணதாசனுக்கே குழப்பம் இருந்ததாகவும்” குறிப்பிட்ட சீமான், “நீல நிறம் என்பது வடக்கிலிருந்து திணிக்கப்பட்டது” என்றும் மேற்கொள் காட்டினார்.

மேலும், “தம்பிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது, அடுத்தவர்களின் மனம் வேதனைப்படாத வகையில் கருத்துக்களைப் பதிவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இப்படி, முக நூலில் ஒரு தம்பி, சாதியைப் பற்றிக் குறிப்பிட்டு, இழிவாக ஒரு பதிவு போட்டு இருந்ததாகவும், அவரால் நான் கடும் அவதியுற்றதாகவும்” சீமான் கவலைத் தெரிவித்தார்.

இறுதியாக, “நாம் தமிழர் கட்சியைப் பார்த்துக் குரைக்கும் நாய்களுக்குப் பதில் அளிப்பதாக நினைத்து, தம்பிகள் திருப்பி குனிந்து நின்று குரைக்கக் கூடாது” என்றும் அவரது கட்சி தொண்டர்களுக்குச் சீமான் அறிவுறுத்தினார்.