பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஆணையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதான ராமர், அங்குள்ள மணக்காடு பகுதியில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில், விவசாயம் செய்து வந்தார்.

ராமரின் பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதான கலியமூர்த்தி, ராமரின் சித்தப்பா மகன். இருவரும் பங்காளி முறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கலியமூர்த்தியும், அவரது மனைவி 34 வயதான கனகாவும், அவர்களது தோட்டத்திலேயே வீடு கட்டி வசித்து வந்த நிலையில், விவசாய வேலைகளைப் பார்த்து வந்தனர்.

ராமர், தன் தோட்டத்திற்கு வரும்போதெல்லாம், தன் பங்காளி மனைவியான கனகாவிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக, கனகா, தன் கணவரிடம் புகார் அளித்துள்ளார். அவரும் ராமரை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் கனகாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பஞ்சாயத்து கூடி, ராமரை சாமி முன்பு இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்யச் சொல்லி, கண்டித்து அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தோட்டத்திற்குச் சென்ற ராமர், கனகாவிடம் மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த கனகா, தன் கணவரிடமும், தன் தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, 3 பேரும் சேர்ந்து, ராமரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில், அவர் மயங்கி விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த 3 பேரும், அவரது உடலை அருகில் உள்ள மின்வேலியில் கொண்டு போட்டுள்ளனர். பின்னர், அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ராமர் மின்சாரம் தாக்கி உயிரிழக்கவில்லை என்றும், அவர் அடித்தே கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீசார், கனகா உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.

இதனிடையே, பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.