18 வயது வித்தியாசம் இருந்தும், சாவிலும் கணவன் மனைவி இணைபிரியாத நிகழ்வு நடந்துள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோயில் அருகே ரங்கசாமி - கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர்.

ரங்கசாமிக்கு 86 வயது. கண்ணம்மாளுக்கு 68 வயது. இருவரும் பரஸ்பரமாக அன்புகொண்டு, வாழ்ந்து வந்தனர். இந்த முதுமையிலும் அவர்கள் அன்பான தம்பதிகளாக அப்பகுதியினரால் பார்க்கப்பட்டனர். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் மற்றும் பேரன் பேத்திகள் உள்ளனர்.

Coimbatore woman dies after hearing news of husband death

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கண்ணம்மாள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தள்ளாத வயதிலும் கணவர், மனைவியை மருத்துவமனை அழைத்துச் சென்று வந்தார். 

இதனிடையே, நேற்று வீட்டிற்குள் ரங்கசாமி  நுழைந்தபோது, வீட்டின் கதவில் எதிர்பாராத விதமாக மோதி உள்ளார். இதில், படுகாயமடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரங்கசாமியின் மனைவி கண்ணம்மாள், ஓடிச்சென்று கணவர் மீது விழுந்தும், அவரை அணைத்துக்கொண்டும் கதறித் துடித்துள்ளார்.

அழுதுகொண்டே இருந்த அவர், சிறிது நேரத்தில் நெஞ்சைப் பிடித்தபடியே, தன் கணவர் உடல் மீது சாய்ந்துள்ளார். சாய்ந்தவர், அப்படியே உயிரிழந்தார். 

Coimbatore woman dies after hearing news of husband death

கணவன் - மனைவி இருவருக்கும் 18 வயது வித்தியாசம் இருந்தும், சாவிலும் இணைபிரியாமல், கணவர் இறந்த அதிர்ச்சியைப் பார்த்து, மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியொரு காதல் இந்த தலைமுறையினரிடம் பார்ப்பது அரிது!