அரசுப் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து, பழைய பேருந்து நிலையம் நோக்கிச் அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிரே தனியார் கல்லூரி பேருந்து வந்துகொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் நிறைந்திருந்தனர்.

இந்நிலையில், அயோத்தியாப்பட்டணம் வளைவில் அரசுப் பேருந்து திரும்பி உள்ளது. அப்போது, எதிரே வேகமாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்தும் வந்த வேகத்தில், திரும்பி உள்ளது. இதில், இரண்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அரசுப் பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகளும், தனியார் கல்லூரிப் பேருந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்களும் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்துக் காரணமாக, சேலம் - அயோத்தியாப்பட்டணம் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.