பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண், முகநூலில் மீண்டும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சேலம் நீதிமன்றத்தின் இலவச சட்ட பணிகள் ஆணையம் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் பரிமளா, சமூக ஆர்வலராகவும் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

இதனால், தனது முகநூல் பக்கத்தில் அன்றாட சமூக அவலங்கள் மற்றும் அரசியல் நடப்புகள் தொடர்பாகவும் எதிர்மறையான கருத்துக்களைத் தினமும் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், சிஏஏ வுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி பற்றி, பதிவிட்ட அவர், அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

குறிப்பாக, “மோடி ஆட்சியில் நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்றும், அவரை கொல்ல நான் மனித வெடிகுண்டாக செயல்படவும் தயார்” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு குறித்து, சேலம் மாவட்ட பாஜக பிரமுகர் செந்தில்குமார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையைத் துவங்கியதையடுத்து, முகநூல் பக்கத்தில் பரிமளா வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, “இந்திய இறையாண்மைக்கு, அரசு பொறுப்பாளர்களுக்கும் எந்தவித மிரட்டலும் தன்னால் வேண்டுமென்றே பதிவிடப்படவில்லை என்றும், துரதிர்ஷ்டவசமாக பதிவாகி உள்ளதாகவும்” பரிமளா வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

மேலும், “இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன் என்றும், மன்னிக்க வேண்டுகிறேன்” என்றும் பரிமளா வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.