கொரோனாவை விரட்ட பக்தர்களுக்கு முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் உயிரிழந்த நிலையில், அவரிடம் முத்தம் பெற்ற 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கமல் நடித்த “வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” படம் அனைவருக்கும் நினைவிருக்கும். அதில், நோய்வாய்ப்பட்டவர்களை நடிகர் கமல், கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறுவார்.

அதேபோன்ற ஒரு நிகழ்வுதான், கொரோனாவை குணப்படுத்துகிறேன் என்று சாவல் விட்ட சாமியார் ஒருவர் பக்தர்களுக்கு “முத்தம்” கொடுத்து, அதன் மூலம் கொரோனாவை விரட்டுவேன் என்று களம் இறங்கினார். ஆனால், முடிவில் அவரே கொரோனாவுக்கு பலியாகும் சூழல் ஏற்பட்டது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் “அஸ்லாம் பாபா” என்ற சாமியார், தனது ஆசிரமத்தில் ஹீலிங் செய்வதாகக் கூறி, தன்னை தேடி வரும் பக்தர்களை நம்ப வைத்து, அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.

மேலும், தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு “முத்தம்” கொடுத்தால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாது என்றும் கூறி, தன்னை தேடிவந்த அனைத்து பக்தர்களுக்கும் “முத்தம்” கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே, அந்த சாமியாரை பார்க்க வந்த பக்தர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் சாமியாருக்கும் கொரோனாவை பரப்பிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இது தெரியாத சாமியார், பல பக்தர்களுக்கும் முத்தம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாமியார், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அந்த சாமியாருடன் தொடர்பிலிருந்த 24 பேரை கண்டுபிடித்து, அவர்களிடம் பரிசோதனை நடத்தி உள்ளனர். அப்போது, அவர்கள் 24 பேருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், அவர்களும் உயிர் பயத்தில் கடும் பீதியடைந்துள்ளனர்.

பொதுமக்கள் பலருக்கும், கொரோனா எப்படிப் பரவுகிறது என்று தெரியாமல் இருக்கும் நிலையில், மூட நம்பிக்கையால், தெரிந்தே சிலர் இதுபோன்று கொரோனாவை தொற்றிக்கொண்டு வந்திருப்பது, அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.