மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் எதிர்பாராத வகையில், கொரோனாவின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதால், தற்போது 3 வது முறையாக மத்திய அரசு பொது ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இதுவரை 40 நாட்கள் பொது ஊரடங்கு அமலில் இருந்த வந்த நிலையில், தற்போது 3 வது முறையாக நீட்டிக்கப்படும் ஊரடங்கால், 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள், குறைவாக உள்ள பகுதிகள் மற்றும் கொரோனா தாக்கம் இல்லாத பகுதிகள் எல்லாம் கண்டறியப்பட்டு, அவற்றை மத்திய - மாநில அரசுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக வகைப்படுத்தி உள்ளன.

அதன்படி, நாடு முழுவதும் கொரோனா இல்லாத மாவட்டங்கள் மொத்தம் 319 மாவட்டங்கள் இருப்பதாகவும், அவை பச்சை மண்டலங்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில், தமிழகத்தில் ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே இருந்த நிலையில், இன்று அது ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு மாவட்டம் கூட, பச்சை மண்டலத்தில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது, தமிழக மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும், நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை, ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாடு முழுவதும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடும் பகுதிகள் சுமார் 130 மாவட்டங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவை, சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பெற்றுள்ளன. அத்துடன், தமிழகத்தில் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே அதிகபட்சமாகப் பாதிப்புக்கு உள்ளான மராட்டியத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த மாநிலத்தில், 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 19 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு மட்டும் 36 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அத்துடன், அங்குப் பச்சை மண்டலங்கள் என்று 20 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள 2 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 10 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 2 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் சிவப்பு மண்டலங்கள் பட்டியலில் இதுவரை எந்த மாவட்டமும் இடம் பெறவில்லை. ஆனால், புதுச்சேரியில் 1 மாவட்டம் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதேபோல், அங்கு 3 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.