“என்னை ரஜினி தூண்டி விடவில்லை” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் “தர்பார்” பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “தான் சிறுவயதில் கமல்ஹாசன் போஸ்டர்களில் சாணி அடித்து இருக்கிறேன்” என்று பேசியதாகத் தெரிகிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், பலரும் சமூக வலைத்தளத்தில் எதிர்க் கருத்து கூறி, அவரை வசைபாடினார்.

இதனையடுத்து, ரஜினி பிறந்தநாள் விழாவில், தான் நடிகர் கமல்ஹாசன் பற்றிக் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார். ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை.

பின்னர், கமல்ஹாசனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அறிக்கையையும் அவர் உடனே வெளியிட்டார். ஆனாலும், அதை ஏற்றுக்கொள்ளாத கமல் ரசிகர்கள், தொடர்ந்து ராகவா லாரன்ஸ்க்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், நடிகர் ராகவா லாரன்ஸை, நடிகர் ரஜினி தூண்டி விடுகிறார் என்றும் செய்திகள் பரப்பப்பட்டன. இதனால், அதிர்ச்சியடைந்த லாரன்ஸ், இது தொடர்பாக விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ நான் டிவிட்டரில் பதிவிடும் கருத்துகள், எனது பேச்சுகள், இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் எல்லாம் எனது சொந்த கருத்துகள் தான். எனது கருத்துகளுக்கு நடிகர் ரஜினிகாந்த், எந்தவகையிலும் பொறுப்பு இல்லை.

தலைவர் ரஜினிகாந்த் சொல்லித்தான் நான் பேசுகிறேன் என்று சிலர் சொல்வதில் உண்மை இல்லை. அவர் பேச விரும்பும் விஷயங்களை அவராகவே பேசுவார்.

ஒருவரைத் தூண்டி விட்டுப் பேச வைப்பவர் ரஜினி இல்லை. என்னால் ரஜினிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது.

ஒரு ரசிகனாக ரஜினிகாந்திடம் நான் எதிர்பார்ப்பது ஆசீர்வாதமும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதையும்தான் எதிர்பார்க்கிறேன். எந்த அரசியல் கட்சிக்கும் நான் எதிரானவன் இல்லை. யாரையும் ஆதரிக்கவும் இல்லை. சமூக சேவை செய்து வருகிறேன். அரசியலில் தொடர்பு இல்லை.

எனது பிறந்த இடம், மொழி மற்றும் சேவைகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கெல்லாம் அமைதியாகப் பதில் அளிப்பேன்” என்று ஆவேசமாகப் பதில் அளித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் ரஜினி பற்றி, ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.