நவராத்திரி விழாவின்போது இரவில் ஆற்றில் மூழ்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நவராத்திரி விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்வாக, துர்க்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தோல்பூர் நகரில் உள்ள பார்வதி ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர். அம்மன் சிலை, ஆற்றில் இறங்கிய சில நிமிடங்களிலேயே, ஊர் மக்களோடு வந்த சிறுவன் ஒருவன், குளிப்பதற்காக, ஆற்றில் குதித்துள்ளார். இதில், அவர் நீரில் மூழ்கித் தத்தளித்த நிலையில், அம்மன் சிலையோடு ஆற்றில் இறங்கியவர்களில் சிலர், சிறுவனைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால், ஆற்றில் குதித்தவர்களில் 10 பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், நீரில் மூழ்கியவர்களை மீட்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விழா ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நவராத்திரி விழாவின்போது நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்துள்ளதால், அந்த கிராமமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.