தொடர் கனமழை எதிரொலியாக 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 10 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மழை நீர் சாலையில் தேங்கி உள்ள நிலையில், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நேர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

குறிப்பாக, கனமழை எதிரொலியாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, புதுச்சேரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்த, 9 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், இன்னும் 2 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சூறாவளிக் காற்று வீசும் என்பதால், கன்னியாகுமரி, லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்படிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.