சென்னையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகத் திகழும் விஜய் சேதுபதி, விளம்பம் படம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார்.

இணைய விற்பனை நிறுவனமான மண்டி என்னும் ஆன்லைன் வியாபார ஆப் நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றும் நடிகர் விஜய் சேதுபதி, ஆன்லைன் விற்பனையை ஊக்கு விக்கும் வகையில் நடித்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஆன்லைன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அவரது நடிப்பது இருப்பதால், அந்த விளம்பரம் நாள்தோறும் டி.வி.யில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

இதனால், குடிசைத் தொழில் உள்ளிட்ட சிறு சிறு கடைகளில் வியாபாரம் கூட முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும், குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தமிழக சிறு குறு வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் விஜய் சேதுபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்தது. ஆனால், இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் எந்த வித விளக்கமும் தரப்படாமல் இருந்தது. மேலும், டி.வி.யில் ஒளிப்பரப்பான விளம்பரமும், நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன.

இதனால், ஆத்திரமடைந்த சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, அவரது அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். பின்னர், அவர்கள் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதனால், வளசரவாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.