ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏடிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால், காவல் நிலையங்களில் நாள் தோறும் பதிவாகும் வழக்குகள், தற்போது பெரும்பாலும் பதிவாகவில்லை. ஆனால், 1091, 181 போன்ற சேவைகள் மூலம் குடும்ப வன்முறை தொடர்பாகப் பல புகார்கள் பதிவாகி இருப்பதாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

அதன்படி, கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளதால், குடி பழக்கத்திற்கு அடிமையான ஆண்களால் பலரும், பலவிதமான இன்னல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வீட்டில் உள்ள பெண்களை அவர்கள் அதிகம் துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வீட்டில் உள்ள பெண்களை அதிகப்படியான வீட்டு வேலைக்கு உட்படுத்தப்பட்டு, தொடர்ந்து பல்வேறு விதமான குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்களை மாநில மகளிர் ஆணையமும் சுட்டிக்காட்டி உள்ளது.

இதனையடுத்து, பெண்களுக்கு எதிராக ஏதாவது வன்முறை நிகழ்ந்தால், அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது 181 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் வந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏடிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பெண்கள் தொடர்பான புகார்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தமிழக அரசு மனநல ஆலோசகர்களை மாவட்ட வாரியாக தற்போது நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.