ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிபவர் மீது இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி பலரும் சாலையில் தேவையின்றி சுற்றித் திரிவதாகவும், அரசு மற்றும் காவலர்கள் எவ்வளவு சொல்லியும் சிலர் கேட்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடைகளுக்கு வருவதாகக் கூறிவிட்டு, பொதுமக்கள் சிலர் அடிக்கடி சாலைகளில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள், தங்கள் இருக்கும் பகுதிகளிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்கிறேன் என்ற பெயரில் நீண்ட தூரம் யாரும் பயணம் செய்யக்கூடாது” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், “இதுவரை தடையை மீறி சென்னையில் சுற்றித் திரிந்தவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், தடை உத்தரவை மீறி செயல்பட்ட 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

“பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், ஊரடங்கு காலம் முடிந்த பிறகு உரியவர்களிடம் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், சட்ட விரோதமாக மதுபானம் விற்பவர்களைக் கைது செய்துள்ளதாகவும், திருட்டுத் தனமாக மது காய்ச்சி விற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் ஏ.கேவிஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக, சென்னை பூந்தமல்லி ரிப்பன் மாளிகை அருகே பணியில் உள்ள போலீசாருக்கு பழச்சாறு, முககவசம் மற்றும் சானிடைசரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.