“இந்தியாவிடம் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்!” என்று பிரதமர் மோடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சற்று முன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உள்பட கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். அத்துடன். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதும், இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியா அமைதியை விரும்பும் நாடு” என்று குறிப்பிட்டார்.

“பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ளவேண்டாம் என்றும், இந்தியாவிடம் அத்துமீறினால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுப்போம்” என்றும் சூளுரைத்தார்.

“இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றும், இந்தியர்களின் வீரத்தைச் சரித்திரத்திலும் தெரிந்து கொள்ளலாம்” என்றும் மோடி சுட்டிக்காட்டினார்.

மேலும், “இந்தியா அமைதியை விரும்பும் நாடு” என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேவையில்லாமல் சீண்டினால் எந்த சூழ்நிலையிலும் தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்” என்றும் கூறினார்.

“நம் உரிமையில் எந்தவித சமரசமும் கிடையாது என்றும், நாட்டிற்காக நம் ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் ஒரு நாளும் வீணாகாது என்றும், நம்மை நாம் நிரூபிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதேபோல், “எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றும், நேரம் வரும்போது பலத்தைக் காட்டுவோம்” என்றும் பிரதமர் மோடி சீனாவை கடுமையாக எச்சரித்தார்.