தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்பட்டன.

ஆனால், கொரோனா காலத்தில் வரும் திருவிழாக்களின் போது, முக்கிய கோயில்களில், ஆகம விதிகளின் படி பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் நடைபெற்ற நிலையில், அந்த பூஜைகள் அனைத்தும் இணையதளம் வழியாக பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அனைத்து கோயில்களும் ‛அ' மற்றும் ‛ஆ' பிரிவு அலுவலர்கள் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோயிலில் பணிபுரியும் அலுவலர்கள், சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

“அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் தினமும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும், அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “சளி, இருமல், காய்ச்சல் உள்ள பணியாளர்கள் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.