கைலாசாவில் குடியுரிமைக் கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமத்தில், தனது 4 மகள்களை அடைத்து வைத்து, பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாகப் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 மகள்களை மீட்டனர். ஆனால், மற்ற 2 மகள்களும் அங்கு இல்லை. இதனால், அவர்களை மீட்டுத் தரகோரி, ஜனார்த்தன சர்மா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

அதன்டிப நித்தியானந்தா மீது கடத்தல் வழக்கைப் பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, நித்தியானந்தாவை வரும் 18 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், நித்தியானந்தாவை நேரில் ஆஜர்படுத்தக்கோரி நீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

இதனிடையே, நித்தியானந்தா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். அதன்படி அவர் தனி நாடு உருவாக்கி வருகிறார் என்றும் கூறப்பட்டது. அந்த நாட்டிற்கு, அவர் “கைலாசா” என்றும் பெயரிட்டுள்ளார்.

இது தொடர்பாக தற்போது புதிய வீடியோ ஒன்றையும் அவர் பேசி வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2003 ஆம் ஆண்டு முதல், நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். ஆன்மீகத்துறையில் நான் எப்போதோ தலைவனாகிவிட்டேன்.

என்னைப் பற்றி வரும் மீம்ஸ்களால் வருத்தம் அடையவில்லை. மீம்ஸ் போடுகிற மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும். நானும் ஜாலியாக இருக்கிறேன்” என்று இயல்பாகவும், சுவராசியமாகவும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “முன்பெல்லாம் நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்தான், அதனைத் திசை திருப்ப என்னைப் பற்றிய செய்திகள் வரும். தற்போது ஏதாவது பெரிய பிரச்சினை வரும்போது மட்டும் தவிர்த்து, மற்ற நேரங்களில் என்னைப் பற்றித்தான் ஊடகங்களில் பேசப்படுகின்றன. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்கிற காமெடியைப் போல, எனது நிலை ஆகிவிட்டது.

இதுவரை 'கைலாசா' நாட்டில் குடியுரிமை கேட்டு, 40 லட்சம் பேர் உலகம் முழுவதிலிருந்தும் விண்ணப்பித்துள்ளனர். கைலாசாவை அமைத்தே தீருவேன். இதில் எந்த சமரசமும் கிடையாது. அந்த கடவுளின் அருளால் நான் செய்ய வேண்டிய திருப்பணியாக 'திருகைலாசத்தை' அமைத்தே தீருவேன்” என்று ஆவேசமாகப் பேசி முடித்தார்.

இதனிடையே, நித்தியானந்தா பேசிய வீடியோ தொடர்பாக போலீசார் ஆய்வு செய்தனர். அதன்படி,நித்தியானந்தா அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார், தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.