நித்தியானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு அதிரடியாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமத்தில், தனது 4 மகள்களை அடைத்து வைத்து, பார்க்க அனுமதி மறுப்பதாகப் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 மகள்களை மீட்டனர். ஆனால், மற்ற 2 மகள்களும் அங்கு இல்லை. இதனால், அவர்களை மீட்டுத் தரகோரி, ஜனார்த்தன சர்மா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாகப் பெண்களைக் கடத்தி கொடுமைப்படுத்தியதாக நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் பொறுப்பாளர்களா இருந்த பிரன்பிரியா மற்றும் அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகியோரை போலீசார், கடந்த மாதம் கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் இருவர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனுவை, கடந்த மாதம் 27 ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அவர்கள் இருவர் தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த குஜராத் ஆமதாபாத் நீதிமன்றம், இருவரும் தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால், இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று அதிரடியாக அவர்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதனிடையே, நித்தியானந்தா நேரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அல்லது அவரை போலீசார் கைது செய்ய வேண்டும். அதன் பிறகே. அவருடைய இரு பெண் சீடர்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், நித்தியானந்தா உட்பட கைதாகி உள்ள 2 பெண் சீடர்கள் மற்றும் அவரது ஆசிரம நிர்வாகிகள் பலரும் பீதியடைந்துள்ளனர்.