வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், கடந்த வாரம் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் உருவாகி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதன்பின், மழை படிப்படியாகக் குறைந்த நிலையில், கடந்த 4 நாட்களாக வெயில் வாட்டி வருகிறது.

இந்நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளன. குறிப்பாக, வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகும் என்று, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயல், வடக்கு ஒடிசாவை நோக்கி நகர்ந்து செல்லும் என்றும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 6,7 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று பலமாக வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள 3 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், இன்று இரவு முதல் வரும் 7 ஆம் தேதி வரை, மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.