திமுக பேரணியில் போலீசாரை விடப் பேரணிக்கு வந்தவர்கள் கூட்டம் குறைவு என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாகப் பதில் அளித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நேற்று சென்னையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

பேரணியின் நிறைவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தி.மு.க.,வின் பேரணிக்கு மிகப்பெரிய விளம்பரம் தேடித்தந்த அதிமுகவிற்கு நன்றி. அதேபோல், தி.மு.க. பேரணியில் போலீசார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டது மகிழ்ச்சி” என்று கிண்டலாகப் பேசினார்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு, சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் இன்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்றைய பேரணியில் திமுக, 108 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும், வெறும் 5000 பேருக்கு மேல் பேரணியில் கூட்டம் கூடவில்லை” என்று கிண்டலடித்தார். “போலீசாரின் கூட்டத்தைவிட, பேரணிக்கு வந்தவர்கள் கூட்டம் குறைவு தான். தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் திமுக பேரணியில், வன்முறை ஏதும் நடைபெறவில்லை” என்று நக்கலாகப் பேசினார்.

மேலும், சமூக வலைத்தளங்களில், தந்தை பெரியார் குறித்து பாஜக சார்பில் விமர்சிக்கப்படுவது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சமூக சிந்தனைக்காக வாழ்ந்த பெரியாரின் வாழ்க்கையை யார் கொச்சைப்படுத்தினாலும், அது தவறுதான்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இதனிடையே, நேற்றைய பேரணியில் மு.க.ஸ்டாலின் பேசியதும், அதற்கு தற்போது அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துப் பேசியதும் தற்போது வைரலாகி வருகிறது.