மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறப்பது குறித்து காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணை திறப்பால், நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாகக் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கும் காலத்தைக் கணக்கிட்டு, நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலை இருந்து வந்தது.

ஆனால், தென்மேற்கு பருவ மழை துவங்கி அணை நிரம்பிய பிறகே, மேட்டூரில் நீர் திறக்கப்படும் சூழல் உருவானது. இதனால், கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி அன்று, இந்த ஆண்டு திறக்கப்பட உள்ளதால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.