குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் - கலாராணி தம்பதியின் 2 வயது மகன் சுஜிர்த் வில்சன், கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கும்போது, அந்த பகுதியில் மூடப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

முதலில் 20 அடி ஆழத்தில் சிக்கிய சுஜித்தை மீட்கும் முயற்சியில், குழந்தை 60 அடி ஆழத்திற்குச் சென்றது. அப்போது, ஆழ்துளைக் கிணற்றின் அருகிலேயே ராட்சத இயந்திரங்கள் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், அதிர்வு ஏற்பட்டு, குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணற்றில் மண் சரிந்தது. இதனால், பள்ளம் தோண்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் என்.எல்.சி. மற்றும் ஓ.என்.ஜி.சி. குழுக்கள் மூலம் குழந்தையை மீட்கு முயற்சி நடைபெற்றது. அப்போது, சிறுவன் 80 அடி ஆழத்திற்குச் சென்றான். மீண்டும் சிறுவனை மீட்க எடுக்கப்பட்ட அடுத்தடுத்த முயற்சியில், சிறுவன் 100 அடி ஆழத்திற்கு நழுவிச் சென்றான். இப்படியாக மொத்தம் 80 மணி நேரம், சிறுவனை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இதனையடுத்து, இன்று அதிகாலை 2.30 மணிக்குக் குழந்தை சுஜித், உயிரிழந்துவிட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.

தேசிய மற்றும் மாநில பேரிடம் மீட்புக் குழுவினர் சேர்ந்து குழந்தையை மீட்ட நிலையில், மணப்பாறை அரசு மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, திருச்சி மாவட்ட ஆட்சியர் சுவராசு, எம்.பி.ஜோதிமணி, அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, நடிகர் விமல் மற்றும் நடுக்காட்டுப்பட்டி கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், நடுக்காட்டுப்பட்டியில் உள்ள புதூர் கல்லறைத் தோட்டத்திற்கு சுஜித்தின் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு, கிறிஸ்துவ முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்று, குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும், சுஜித் இறப்புக்குக் காரணமான ஆழ்துளைக் கிணறும், சுஜித்தை மீட்கப் புதிதாகத் தோண்டப்பட்ட கிணறும் கான்கிரீட் கலவையால் உடனடியாக மூடப்பட்டது.

இதனிடையே, குழந்தை சுஜித் மீண்டும் மண்ணுக்குள் துயில் கொண்டது, தமிழக மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.