நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை பீர் பாட்டிலால் கணவன் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குமரன் - 28 வயதான காமாட்சி தம்பதிக்கு, 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குமரன் அப்பகுதியில் சமையல் வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, மனைவி காமாட்சிக்கு, மற்றொரு நபருடன் தகாத உறவு ஏற்பட்டதாகக் குமரனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடைய பிரச்சனை எழுந்துள்ளது.

அப்போது, மனைவியைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, சிறை சென்று, பின்னர் வெளியே வந்தார்.

இதனையடுத்து, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு, காமாட்சி தனது குழந்தைகளைப் பார்க்க முகப்பேரில் உள்ள குமரன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், அவர் தனது அம்மா வீட்டிற்குத் திரும்பி உள்ளார்.

பின்னர், காமாட்சியின் அம்மா வீட்டிற்கு வந்த குமரன், அங்குக் காமாட்சி மற்றும் அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இப்போது, அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில், காமாட்சி தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த குமரன், அங்குக் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து, காமாட்சியைச் சரமாரியாகக் கழுத்து, வயிறு என்று மாறி மாறி குத்தி உள்ளார். இதனையடுத்து, குமரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அவரது பெற்றோர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர், காமாட்சியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், குமாரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே, மனைவியை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.