கழுத்தில் நிஜ பாம்புடன் அம்மனாக மாறி பெண் சாமியார் ஒருவர் அருள் வாக்கு சொன்ன சம்பவம் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், “நான் வட பத்தரகாளியம்மன்” என்று கூறி வருகிறார் கபிலா. இவர், எம்.ஏ. வரை படித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட இந்த கோயில், கபிலாவே கட்டி எழுப்பி உள்ளார். ஆரம்பத்தில் குடிசையில் அமர்ந்து அருள் வாக்கு கூறி வந்த அவர், பேய் ஓட்டுவதாகவும், முடமானவர்களை நடக்க வைப்பதாகவும், தீராத நோய்களைத் தீர்த்து வைப்பதாகவும் கூறி, அருள் வாக்கு கூறி வருகிறார்.

இதனால், இவருக்கு அதிக அளவிலான காணிக்கை கிடைத்த நிலையில், ஒரு பெரிய ஆலயமே எழுப்பி, தற்போது, அந்த ஆலயத்தில் அமர்ந்து அருள் வாக்கு கூறி வருகிறார். இதுவரை இந்த ஆலயத்தில் 2 முறை கும்பாபிசேகம் செய்து முடித்துள்ளார்.

இந்நிலையில், கோயில் விழா நடைபெறுவதையொட்டி, கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரவைக்கவேண்டி, அங்குள்ள ஒரு பாம்பாட்டியிடம், 10 ஆயிரம் ரூபாய்க்கு 2 பாம்புகளைக் கபிலா, வாடகைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அதில், ஒரு பாம்பு அடிக்கடி சீறியதால், பயந்துபோன கபிலா, அதை அப்படியே வைத்து விட்டு, சோர்ந்திருந்த பாம்பைக் கோயில் சிலைகளில் அம்மாள் மேல் ஊர்ந்து போக வைத்தும், பாம்பை தாம்பூலத்தில் வைத்து, அதற்கு பாலாபிஷேகம் செய்தும், வீடியோ எடுத்துக்கொண்டார்.

மேலும், அம்மன் போலவே தன்னை அலங்கரித்துக்கொண்டு, அம்மன் சிலை முன்பு வந்து நின்று சூலத்துடன் சாமியாடினார்.

இதனையடுத்து, கழுத்தில் பாம்புடன், ஒரு கையில் சூலத்துடனும், சாச்சாத் அந்த அம்மனாகவே போஸ் கொடுத்து அசையாமல் நின்றார். இதனை அங்குக் கூடியிருந்த பக்தர்கள் வியந்து பார்த்தனர். இதனையடுத்து, அவர் அருள் வாக்கு கூறியதாகத் தெரிகிறது.

இதனிடையே, கபிலா அம்மாள், கழுத்தில் நிஜ பாம்புடன் அம்மனாக மாறி போஸ் கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.