பேருந்துகளுக்கு போலீசார் தீ வைத்து, பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது பாஜகவின் மோசமான அரசியல் என்று டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் ஜே.எம்.இ.பல்கலைக்கழக மாணவர்கள் 2 ஆயிரம் பேர் நேற்று அமைதியான முறையில் பேரணி நடத்தினர்.

அப்போது, போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்குக் கலவரம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர்.

அப்போது, பெண்கள் என்று கூட பாராமல், தன்னுடைய ஒட்டுமொத்த பவரையும் திரட்டி போலீசார், பெண்கள் மீது மனிதத்தை மீறி கடுமையாகத் தாக்கி உள்ளனர். மேலும், மாணவர்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் போலீசார் வீசியுள்ளனர்.

இதில், உயிர் பயத்தில் சிதறி ஓடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் தஞ்சமடைந்தனர். ஆனால், அவர்களை விடாமல் துரத்திச் சென்ற போலீசார், பல்கலைக்கழகத்திற்குள் கண்ணில் பட்ட மாணவர்களை எல்லாம் வெறித்தோமாக போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்கள் பதுங்கியிருந்த அறைக்குள் போலீசார் அத்துமீறி கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதாகவும், இதனால் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

चुनाव में हार के डर से बीजेपी दिल्ली में आग लगवा रही है. AAP किसी भी तरह की हिंसा के ख़िलाफ़ है. ये बीजेपी की घटिया राजनीति है. इस वीडियो में ख़ुद देखें कि किस तरह पुलिस के संरक्षण में आग लगाई जा रही है. https://t.co/IoMfSpPyYD

— Manish Sisodia (@msisodia) December 15, 2019

இதனிடையே, மாணவர்கள் பேரணியில் போலீசார் தான், பேருந்துகளுக்கு தீ வைத்து வன்முறையை தூண்டிவிட்டதாக புதிய வீடியோ ஒன்றை, டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பேருந்தின் அருகே சில இருசக்கர வானங்கள் தீயில் எரிந்துகொண்டிருக்கிறது. அதனை ஒரு போலீஸ்காரர் அணைக்க முயற்சிக்கிறார். ஆனால், அதே நேரத்தில், ஒரு போலீஸ் காரர் மஞ்சள் நிற கேனில் பெட்ரோல் போன்று எதையோ கொண்டு வருகிறார். அதனை மற்றொரு போலீஸ்காரர் வாங்கி, பேருந்தின் அருகில் சென்று, பேருந்திற்கு வெளியே ஊற்ற முயல்கிறார். ஆனால், அதற்குள் பேருந்தின் உள் புறத்தில் மற்றொரு போலீஸ் காரர், வெள்ளை நிற கேனில் எதையோ ஊற்றுகிறார். அந்த கேமரா அப்படியே சுழல்கிறது.. அதன் அருகில் ஏராளமான போலீசார், நடுரோட்டில் கையில் லத்தியுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். இப்படியாக அந்த வீடியோ முடிகிறது.

இதனிடையே, இந்த விடியோவை வெளியிட்டுப் பேசியுள்ள டெல்லி முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, “பேருந்துகளுக்கு போலீசார் தீ வைப்பதும், பெண்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதுதான் பாஜகவின் மோசமான அரசியல் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், “டெல்லி காவல்துறையை, உள்துறை அமைச்சகம் தான் நேரடியாகக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது. போராட்டம் தொடர்பாக இங்கு நடக்கும் அனைத்தும் உள்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான அமித்ஷாவுக்கு நேரடியாகச் சென்றுகொண்டிருக்கிறது” என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, போலீசார் பேருந்துகளுக்கு தீ வைத்து எரிக்கும் வீடியோவும், போலீசார் உடையில் இல்லாத ஒருவர், சக போலீசாருடன் இணைந்து மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது வெறித்தோமாக தாக்குதல் நடத்தும் புகைப்படங்களும், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.