பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.

அப்போது, தீவிரவாதிகள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கண்மூடித் தனமாகத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில், பல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, பல நாடுகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வந்தது. இதனையடுத்து,சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி, அங்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.

இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. இதனால், பெரும்பாலான கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தான் சென்று விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வங்காள தேச அணி பாதுகாப்பைக் காரணம் காட்டி, பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான எஹ்மான் மானி இந்தியாவைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

அதன்படி, “பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எந்த அணி பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறதோ, அந்த அணி அதனை நிரூபிக்க வேண்டும்.

இலங்கை தொடருக்குப் பின்னர் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டைப் பற்றிக் கவலைப்பட முடியாது. பாகிஸ்தானை விட, இந்தியாவில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக மிக அதிகம்” என்று விமர்சனம் செய்தார்.

இதற்குப் பதில் அளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால், “எஹ்மான் மானி இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு, தகுதியில்லாதவர்” எனக் கூறினார்.

“பெரும்பாலும் லண்டனில் தங்கியிருக்கும் ஒருவர், இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பது முற்றிலும் பொருத்தமற்றது.பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்துக் கூட கருத்து தெரிவிக்க அவர் தகுதியற்றவர்.

பாகிஸ்தானில் வசித்தால், அங்குள்ள உண்மை நிலவரத்தை அவரால் புரிந்து கொள்ள முடியும்” என்றும்” காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.