“இந்தியன்-2” படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

“இந்தியன்” படம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், “இந்தியன்-2” 2 ஆம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இதனிடையே, சென்னை அடுத்த நசரத்பேட்டையில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற “இந்தியன்-2” படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது, எதிர்பாரத விதமாக கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் உள்பட மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையின்போது, “இந்தியன்-2” படத்தின் இணை இயக்குநர் பரத்குமார் அளித்த வாக்குமூலத்தில், “படப்பிடிப்பின் போது லைக்கா நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இருந்ததே, விபத்துக்குக் காரணம்” என்று கூறியிருந்தார்.

பின்னர், இந்த வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, “விபத்து நடத்த இடத்தில், நானும் இயக்குநர் ஷங்கரும் இருந்ததாக” நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

நடிகர் கமல்ஹாசனின் கருத்தைக் கருத்தில்கொண்ட போலீசார், ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் கிடைக்கப்பெற்ற நிலையில், விசாரணைக்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில், இயக்குநர் ஷங்கர் தற்போது ஆஜரானார்.

அப்போது, காவல் ஆணையர் விசுவநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், இயக்குநர் ஷங்கரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, விபத்து நடந்தது தொடர்பாகவும், படப்பிடிப்பின்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இயக்குநர் ஷங்கரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், சில விளக்கங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்கு பிறகு, இயக்குநர் ஷங்கர் அங்கிருந்து வீடு திரும்பினார். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.