இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 2,003 பேர் உயிரிழந்துள்ள கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதியில் முதல் உயிரிழப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு தற்போது 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேற்று 1,672 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 10,951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 2,701 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியானதாகவும், இதில் 81 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,445 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 48,019 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 528 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்டியலில் 3 வது இடத்தில் உள்ள டெல்லியில் நேற்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் அங்கு 93 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்த மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1837 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,688 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 2,003 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,921 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது, 3,43,091 லிருந்து 3,54,930 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013லிருந்து 1,87,552 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது,