ஊரடங்கு காலத்தில் அதிகரித்த குடும்ப வன்முறையால், பாதுகாப்பு அதிகாரிகளின் செல்போன் எண்களை விளம்பரம் செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனாவின் கோரப் பிடியால், திக்கி திணறும் இந்தியா, வீடுகளில் முடங்கிப் போய் உள்ளன. இதனால், பலரும் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு, வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

பல தம்பதிகள், திருமணம் ஆன புதிதில் அதிக நேரங்கள் ஒன்றாகச் சேர்ந்து இருந்து செலவிட்டதைத் தாண்டி, மறுபடியும் தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் தான் சேர்ந்து இருந்து ஒன்றாகப் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

இதனால், பல இடங்களில் நெருக்கம் அதிகரித்து, ரொமான்ஸ்சும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இன்னும் சில இடங்களில், மதுபோதைக்கு அடிமையானவர்களின் வீடுகளில் குடும்ப வன்முறை தலைதூக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 257 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 69 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானவை எனவும் தேசிய பெண்கள் ஆணையம், அறிக்கை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து, ஊரடங்கு காரணமாக அதிகரித்துள்ள குடும்ப வன்முறைச் சம்பவங்கள் குறித்து புகார் செய்வதற்கு எளிதாக, பாதுகாப்பு அதிகாரிகளின் செல்போன் எண்களை விளம்பரம் செய்யக் கோரி வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் புகார்கள் அளிக்க குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு அலுவலரின் செல்போன் எண்களை விளம்பரப்படுத்த வேண்டும்” எனவும், வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.