“எனக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து நான் சாக துணிந்தேன்” என்று கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ராபின் உத்தப்பா.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அனைவரையும் திரும்பிப் பாரக்க வைத்தவர் ராபின் உத்தப்பா. அவர் களம் கண்ட அனைத்து போட்டிகளிலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டு, அதிரடி காட்டினார்.

இப்படி, அவர் களம் கண்ட அனைத்து போட்டியிலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ராபின் உத்தப்பா, மிகச் சிறந்த பேட்ஸ் மேன்களில் ஒருவராக வலம் வந்தார்.

ஆனால், அணியில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ தெரியவில்லை, இந்திய அணியில் முதல் 15 பேரில் ஒருவராக உத்தப்பா இடம் பெற்றாலும், 11 பேரில் ஒருவராக அவரால் களம் இறங்க முடியவில்லை.

இதனைத்தொடர்ந்து, இந்திய அணியிலிருந்து மிகவும் குறுகிய காலங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார்.

இது தொடர்பாகத் தனது சோகமான நினைவுகளை உத்தப்பா, தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார். “கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் அண்டு வரை, எனக்கு மிகவும் கசப்பான காலமாகவும், கஷ்ட காலமாகவும் இருந்ததாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “ அந்த நேரத்தில் எனக்குத் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து, நான் சாக துணிந்தேன்” என்றும் கூறியுள்ளார்.

“ஒருமுறை, இந்திய அணியினர் விளையாடிக்கொண்டிருந்தபோது, நான் பால்கனியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ள உத்தப்பா, “அணியில் களமிறங்கி விளையாட முடியவில்லை என்பதைத் தாண்டி, எனக்கு அங்கிருந்து ஓடிவிடலாம் அல்லது அந்த பால்கனியிலிருந்து குதித்து விடலாம்” என்பது போல் இருந்தது என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

“ஆனால், அதன்பின் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று, அந்த கடுமையான இறுக்கத்திலிருந்து மீண்டு வந்ததாகவும்” தனது சோகமான நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவின்குமார், இதேபோன்று “தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக” மனம் விட்டுப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.